காய்ச்சலும் பாய்ச்சலும்

Published: March 7, 2026 Read by: 14 Get full article

 

  1. தமிழ் வினைப்பகுதிகள் முதன்மை வினைப்பகுதிகள், முற்று வினைப்பகுதிகள் என இரு வகைப்படும். முதன்மை வினைப்பகுதிகளின் அடியாகத் தோன்றி நிகழ்பவை முற்று வினைப்பகுதிகளாகும். காய்ச்சு, பாய்ச்சு, அடைச்சு, தொலைச்சு, பழிச்சு, அடக்கு, கலக்கு, குழப்பு, சேர்த்து முதலானவையும் உயர்க்குவை (பத்துப்.6.131), பெயர்க்குவை (பத்துப்.6.132) கொடுக்குவர் (புறம். 182.5), தூர்க்குவன் (பத்துப்.9.271), வீழ்க்குவன் (பத்துப்.9.272), கேட்குநள் (அகம்.63.19) வருகுவன் (நற்.119.8), தருகுவை (கலி.142.39) உண்குவம் (பதி.58.7) முதலானவற்றில் நிகழும் உயர்க்கு, பெயர்க்கு கொடுக்கு, தூர்க்கு, வீழ்க்கு, கேட்கு, வருகு, தருகு, உண்கு முதலானவையும் முற்று வினைப்பகுதிகளாகும். வரலாற்று நிலையில் முற்று வினைப்பகுதிகள் இறவாக்காலப் பொதுவினை முற்றுக்களாக (Non Past Impersonal Finite Verbs) நிகழ்ந்தவையாகக் கருதப்படும். குடி, கொடு, கொய், சேர், சாய், தின், உண் முதலானவை முதன்மை வினைப்பகுதிகளாகும். இங்கே குறிக்கப்பெற்றுள்ள இரு வகை வினைப்பகுதிகளுள் முற்று வினைப்பகுதிகளைப் பற்றி இந்த எழுத்துரையில் பேசப்படும். 
  2. தமிழில் ஒரு பிரிவு வினைப்பகுதிகள் செயப்படுபொருள் குன்றிய வினைப் பகுதியாகவும் செயப்படுபொருள் குன்றா வினைப்பகுதியாகவும் நிகழும் நிலை காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக அழி, தேய், சாய், சேர், வளர், முறி முதலான தமிழ் வினைப்பகுதிகள் இத்தகையனவாகும். ஆயினும் ஒட்டுமொத்தமாகத் தமிழ் வினைப்பகுதிகளை இத்தகைய பொதுமைப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. தமிழ் வினைப்பகுதிகளின் தோற்றம் நுண்ணிய ஆய்வுக்கு உரியதாகும். வீழ்த்து, புகுத்து, நிறுத்து ஆகிய வினைப்பகுதிகள் பழந்தமிழில் வினையெச்சங்களாக நிகழ்கின்றன. அருந்து என்னும் வினைப்பகுதியானது பழந்தமிழில் அருந்த நாரை (ஐங்.70.1) என்ற தொடரில் இறந்தகாலப் பகுதியாக நிகழ்கிறது. சேர்த்து என்ற வினைவடிவம் மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி (நற்.149.2) என்ற தொடரில் வினைப்பகுதியாக மட்டுமின்றி அன்றும் இன்றும் வினையெச்சமாகவும் நிகழ்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு வீழ்த்து, புகுத்து, நிறுத்து, தாழ்த்து, சேர்த்து, அருந்து ஆகிய வினைப்பகுதிகள் வரலாற்று நிலையில் இறந்தகாலப் பகுதிகளாக நிகழ்ந்தவை என்று துணிய முடியாது. இந்த வினைப் பகுதிகளின் அடி நிலை வடிவங்கள் பற்றியும் பின்னர் பேசப்படும். 
  3. உருள், புரள், மருள், துயில், அமர், இழி முதலான வினைப்பகுதிகள் செயப்படுபொருள் குன்றியவையாகும். தேய், சாய், வளர் முதலானவை போல் இவை செயப்படுபொருள் குன்றா வினைப்பகுதிகளாக செயல்படுவதில்லை. மாறாக உருள், புரள், மருள், துயில், அமர், இழி ஆகியவற்றுக்கு எதிரான செயப்படுபொருள் குன்றா வடிவங்களாக உருட்டு, புரட்டு, மருட்டு, துயிற்று, அமர்த்து, இழிச்சு முதலிய வினைப்பகுதிகள் காணப்படுகின்றன. வரலாற்று நிலையில் இவற்றின் நிலைவடிவங்களும் வீழ்த்து, புகுத்து, நிறுத்து, சேர்த்து, அருந்து முதலியவற்றின் வேறு வாய்பாட்டு அடிநிலை வடிவங்களைப் அடிநிலை வடிவங்களும் இரு வேறு வாய்பாட்டு பின்புலமாகக் கொண்டு தோற்றம் கொண்டவையாகும். அவ்வாறாயின் அந்த வாய்பாட்டு வடிவங்கள் எத்தகையன; எந்தக் காலத்துக்குரிய வினையமைப்புகளாக அந்த வாய்பாட்டு வடிவங்கள் இனங்காணத்தக்கவை? இவை பற்றியும் பின்னர்ப் பேசப்படும். 
  4. தமிழில் காய்ச்சு, பாய்ச்சு ஆகிய இரண்டு வினைப்பகுதிகள் செயப்படுபொருள் குன்றா வினைப்பகுதிகளாக இலக்கிய வழக்கிலும்  கிளைமொழி வழக்குகளிலும் நிகழ்கின்றன. இவற்றுக்கு எதிரான செயப்படுபொருள் குன்றிய வடிவங்கள் காய் (காய்ந்து), பாய் (பாய்ந்து) ஆகிய வினைப்பகுதிகளாகும். வீழ்த்து, புரட்டு ஆகியவற்றைப்போல் காய்ச்சு, பாய்ச்சு ஆகியவற்றின் அடிநிலை வடிவங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஒரு குறிப்பிடத்தக்க செய்தி யாதெனில் காய், பாய் ஆகிய இரு வினைப்பகுதிகளும் நெல்லை, தூத்துக்குடி வட்டாரக் கிளைமொழிகளில் செயப்படுபொருள் குன்றிய வினைப்பகுதிகளாகவும் (எ.டு. காய்ந்து, பாய்ந்து), செயப்படுபொருள் குன்றா வினைப்பகுதிகளாகவும் செயல்படுகின்றன. (எ.டு. கா(ய்)-ச்சு (<காய்-த்து), கா(ய்)ச்சான் (<காய்த்தான்) ‘காய்ச்சினான்’, பா(ய்)-ச்சு (<பாய்-த்து), பா(ய்)ச்சான் (<பாய்த்தான்), ‘பாய்ச்சினான்’, காய்க்க ‘காய்ச்ச’ பாய்க்க ‘பாய்ச்ச’, காய்த்த ‘காய்ச்சிய’, பாய்த்த ‘பாய்ச்சிய’). காய் என்பது செயப்படுபொருள் குன்றா வினையாக நிகழ்வதைப் பின்வரும் எடுத்துக்காட்டுக்களில் காணலாம். 
  5. அம்மா … பதனீர் காய்க்க பனைவிளைக்குப் போயிருக்கிறாள் (தாமரை மணாளன். 2003:72) 
  6. வேலையாட்களை வைத்துப் பதனீர் காய்த்த காலம் இப்போது மாறியாச்சு (மேற்படி. பக். 73) 

இந்த எடுத்துக்காட்டுக்களில் காய்க்க (=காய்ச்ச) என்பது செயவென் எச்சவினையாகவும், காய்த்த (=காய்ச்சிய) என்பது இறந்த காலப்பெயரெச்ச வினையாகவும் நிகழ்கின்றன. காய்க்க (=காய்ச்ச) என்பதில் நிகழும் காய்க்கு என்பது காய் என்னும் செயப்படுபொருள் குன்றா வினைப்பகுதியின் சார்ந்துருபாகக் கொள்ளத்தக்கதாகும். இதேபோல் *பாய்க்க (=பாய்ச்ச) என்பதில் நிகழும் *பாய்க்கு என்பதும் பாய் என்னும் செயப்படுபொருள் குன்றா வினைப்பகுதியின் சார்ந்துருபாகக் கருதத்தக்கதாகும். காய்ச்சு, பாய்ச்சு ஆகிய இரு வினைப்பகுதிகளும் காய், பாய் ஆகியவற்றின் சார்ந்துருபுகளாகிய காய்க்கு, பாய்க்கு ஆகியவையும் ஒருங்கிணைந்த ஆய்வுக்கு உரியனவாகும். காய்ச்சு என்பதன் தெலுங்கு வினைப்பகுதி –காஞ்ச்உ (<*காய்ஞ்ச்உ<*காய்ங்க்உ) என்பதாகும். இந்த வினைப்பகுதியில் நிகழும் மெல்லொலியானது காய்ச்சு, காய்க்கு ஆகியவை தொடர்பான ஆய்வில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். 

  1. செயுந்து வாய்பாட்டு வினைகள் செயும் வாய்பாட்டு வினைகளின் அடியாகத் தோன்றியவை. இதனைத் தொல்காப்பியர் உம்உந் தாகும் இடனுமா ருண்டே (சொல்.சேனா.292) என்ற நூற்பாவின் மூலம் புலப்படுத்துகிறார். செயுந்து வாய்பாட்டு வினைகளின் தொல் வடிவம் *செயுந்த்உ வாய்பாட்டினவாகும். இதனைக் கருத்தில் கொண்டு *செயும்ப்உ, *செயுங்க்உ வாய்பாட்டு இறவாக்காலப் பொதுவினைமுற்றுக்களை மீட்டுருவாக்கலாம். இவற்றினின்றும் தோன்றிய முற்றுவினைப் பகுதிகளே குழம்பு-குழப்பு, திரும்பு-திருப்பு, அடங்கு-அடக்கு, விளங்கு- விளக்கு முதலியனவாகும். குழப்பம், திருப்பம், அடக்கம், விளக்கம் முதலிய வினைப்பெயர்களும் இவற்றிலிருந்து தோன்றியவையாகும். இத்தகைய வினைப்பகுதிகளும் வினைப்பெயர்களும் செயும் வாய்பாட்டு வினைகளின் அடியாகத் தோன்றியவை என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். 
  2. இடைப்பிறவரலாக இங்கே இன்னொரு செய்தியைக் குறிப்பிட வேண்டும். நடச்உ ‘நட’, மறச்சு ‘மற’, தெறச்உ ‘திற’, குடிச்உ ‘குடி, உண்’ மொலச்உ ‘முளை’ முதலான சுகரயீற்று வினைப்பகுதிகளுக்கு இணையான தமிழ் வினைப்பகுதிகள் நடக்கு, மறக்கு, திறக்கு, முளைக்கு முதலானவையாகும். பழந்தமிழில் இத்தகைய வினைப்பகுதிகள் இறந்தகால வினைத்திரிபுகளில் நிகழ்வதில்லை. எடுத்துக்காட்டாக. *நடக்கினான், *நடக்கி, *நடக்கிய ஆகிய இறந்தகால வினைத்திரிபுகளுக்கு வாய்ப்பில்லை. மாறாக இவை எதிர்கால வினைத்திரிபிலும், செய்யும் வாய்பாட்டு வல்வினைகளிலும், செய்யுந்து மற்றும் செய்கின்று வாய்பாட்டு வினையமைப்புகளிலும் காணலாம். எ-டு. கொடுக்குவர், கொடுக்கும், பறிக்குந்து, பறிக்கின்று. பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி (Krishnamurti.1972:162-168) நடச்உ, மறச்உ, தெறச்உ, குடிச்உ முதலான வினைப்பகுதிகளுக்கு இணையான தமிழ் வினைப்பகுதிகளை நட, மற, திற எனவும் மேலே குறிப்பிட்ட தெலுங்கு வினைப்பகுதிகள் நடச்இ ‘நடந்து’, மறச்இ ‘மறந்து’, தெறச்இ ‘திறந்து’ முதலான இறந்தகாலத் தெலுங்கு வினையெச்சங்கள் பிறழ்பிரிக்கப்பட்டு (எ-டு. தெறச்இ. தெறச்இ < தெற+ச்இ .பிறழாய்வு: தெறச்உ+இ) தோற்றம் கொண்டவை என்றும் குறிப்பிடுவார். 
  3. மேலே குறிப்பிட்ட கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வினை ஏற்பதற்கில்லை. ஏனெனில் தெறச்உ, நடச்உ, மறச்உ, குடிச்உ முதலானவற்றுக்கு இணையான தமிழ் வினைப்பகுதிகள் திறக்கு, நடக்கு, மறக்கு, குடிக்கு முதலானவையே தவிர திற, நட, மற, குடி முதலானவையல்ல. கிருஷ்ணமூர்த்தியின் கருதுகோளை ஏற்றுக்கொண்டால் தமிழில் நிகழும் காய்ச்சு, பாய்ச்சு, அடைச்சு, தொலைச்சு முதலான வினைப்பகுதிகளையும் காய்ச்சி, பாய்ச்சி, அடைச்சி, தொலைச்சி ஆகியவற்றின் பிறழ்பிரிப்பாகக் கொள்ளநேரிடும். அதாவது எடுத்துக்காட்டாக அடைச்சி என்பது அடை+ச்சி என்ற அமைப்பினது என்றும் அது அடைச்சு+இ என்று பிறழ்பிரிக்கப்பட்டு அடைச்சு என்ற வினைப்பகுதி தோற்றம் கொண்டது என்றும் கிருஷ்ணமூர்த்தியின் கருதுகோள் தமிழுக்கும் விரிவுபடுத்த வேண்டி நேரிடும். இது நமக்கு உடன்பாடில்லை அடைச்சு என்பது அடை என்னும் முதன்மை வினைப்பகுதியின்மீது தோன்றியமைந்த ஓர் முற்று வினைப்பகுதியாகும். இது தெலுங்குக்கும் பொருந்தும். இதனைக் கருத்தில் கொண்டு தமிழில் காணப்படும் அடைச்சு (குறு. 80.1), தொலைச்சு (நற். 43.3), பழிச்சு (புறம். 113.6), மிலைச்சு (பத்துப். 8.116), காய்ச்சு, பாய்ச்சு ஆகியவற்றின் அடிநிலை வடிவங்கள் முறையே *அடைக்கு, *தொலைக்கு, *பழிக்கு, *மிலைக்கு, *காய்க்கு, *பாய்க்கு என இனங்காணப்படும். தெலுங்கில் காய்ச்சு என்பதற்கு இணையான வினைப்பகுதி காஞ்ச்உ என மெல்லொற்றைக் கொண்டிருப்பதால் நடச்உ, தெறச்உ, மறச்உ முதலான தெலுங்கு வினைப்பகுதிகள் தொலைச்சு, அடைச்சு, காய்ச்சு, பாய்ச்சு முதலான தமிழ் வினைப்பகுதிகள் ஆகியவற்றின் அடிநிலை வடிவங்களிலும் மெல்லொற்று இடம் பெற்றாக வேண்டும். அதாவது இவற்றின் அடிநிலை வடிவங்கள் வாய்பாட்டினவாகக் *செய்ங்க்உ (<*செயுங்க்உ<*செயும்+க்உ) தக்கனவாகும். *செய்ங்க்உ வாய்பாட்டு வினைகளில் நிகழும் மெல்லொற்றுதான் காய்க்கு, பாய்க்கு, திறக்கு, மறக்கு முதலானவற்றில் குகரத்தின் முன்  இனவல்லொற்றாகத் திரிகிறது. எ-டு. *காய்ங்க்உ > காய்க்கு. தெலுங்கில் நிகழும் காஞ்ச்உ என்ற வினைப்பகுதியும் *காய்ங்க்உ என்ற அடிநிலை வடிவத்தினின்றும் தோன்றியமைந்ததாகும். 
  4. காஞ்ச்உ (=காய்ச்சு) என்ற தெலுங்கு வடிவம் செயப்படுபொருள் (செ.பொ.) குன்றா வினைப்பகுதியைக் குறிப்பதாகும். இதற்கு எதிரான செயப்படுபொருள் குன்றிய தெலுங்கு வினைப்பகுதி காங்கு (= காய்) என்பதாகும். இதன் அடிநிலை [±செ.பொ.] என்ற வடிவமும் தொடரனியற்கூறின் அடிப்படையில்தான் வேறுபடுகின்றன. [+செ.பொ.] என்பது செயப்படுபொருள் குன்றா வினைத்தொடரினியற் கூறினையும் (-செ.பொ.) என்பது செயப்படுபொருள் குன்றிய வினைத் தொடரனியற் கூறினையும் குறிப்பனவாகும். காங்கு, காஞ்ச்உ இரண்டும் *காய்ங்க்உ [±செ.பொ.) என்ற நிரல் வினைப்பகுதியாகிய (Neutral Verbal Base) அடிநிலை வடிவத்தினின்றும் தோன்றி நிகழ்வனவாகும். இந்த நிகழ்ச்சியை இப்போதைக்குப் பின்வருமாறு விளக்கலாம். 
  5. *காய்ங்க்உ [±செ.பொ.) (நிரல் வினைப்பகுதி) 

4 (1) *காய்ங்க்உ [+செ.பொ.] > காய்ஞ்ச்உ (ங்க் > ஞ்ச் /ய்-) 

  (2) *காய்ஞ்ச்உ> காஞ்ச்உ (தெலுங்கு) (i > 01-654) 

காய்க்கு, காய்ச்சு ஆகிய செயப்படுபொருள் குன்றாத தமிழ் வடிவங்கள் பின்வருமாறு தோன்றியமையும். 

  1. *காய்ங்க்உ [+செ.பொ.] > காய்க்கு (ங்க் > க்க்) 

6 (1) *காய்ங்க்உ [+செ.பொ.]> காய்ஞ்ச்உ (ங்க் > ஞ்ச்/ய் -)

  (2) *காய்ஞ்ச்உ> காய்ச்சு (ஞ்> ச்/-ச்) 

காங்கு என்னும் தெலுங்கு வினைப்பகுதி பின்வருமாறு வருவிக்கப்படும். 

7 (1) *காய்ங்க்உ[-செ.பொ.] > *காய்ங்கு (ங்க்உ> ங்கு)  

  (2) *காய்ங்கு > காங்கு (ய்>0/-ங்க) 

இந்த ஆய்வு பழிச்சு (<*பழிய்ங்க்உ, இழிச்சு (<*இழியங்க்உ) தொலைச்சு (<*தொலய்ங்க்உ), அடைச்சு (<*அடய்ங்க்உ) முதலியவற்றுக்கும் பொருந்தும். 

  1. மேலே நிகழ்த்திய ஆய்வானது குழம்பு-குழப்பு, கலங்கு-கலக்கு ஆகிய இணைகளை வருவிப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துள்ளது. தொடர்பான ஆய்வானது பின்வருமாறு அமையும். 
  2. *குழய்ம்ப்உ [+செ.பொ.) (நிரல் வினைப்பகுதி) 

9 (1) *குழய்ம்ப்உ [+செ.பொ.] >குழய்ப்பு (ம்ப் > ப்ப்)  

  (2) *குழய்ப்பு > குழப்பு (ய்> 0/-ப்ப்)

10 (1) *குழய்ம்ப்உ [-செ.பொ.] > *குழய்ம்பு (ம்ப்உ> ம்பு)  

   (2) *குழய்ம்பு> குழம்பு (ய்>0/-ம்ப்)  

  1. *கலய்ங்க்உ (±செ.பொ.) (நிரல் வினைப்பகுதி) 

12 (1) *கலய்ங்க்உ [+செ.பொ.]> கலய்க்கு (ங்க்>க்க்)  

   (2) கலய்க்கு > கலக்கு (ய்>0/-க்க்)   

13 (1) *கலய்ங்க்உ [-செ.பொ.]> கலய்ங்கு (ங்க்உ>ங்கு)   

   (2) *கலய்ங்கு > கலங்கு (ய்>0/-ங்க்)  

குழப்பம், கலக்கம் ஆகிய வினைப்பெயர்கள் செயப்படுபொருள் குன்றிய வினைகளோடு தொடர்புடையனவாகும். இத்தகைய வினைப்பெயர்கள் பின்வருமாறு வருவிக்கப்படும். 

14 (1) *குழய்ம்ப்உ (-செ.பொ.]>குழய்ப்பு (ம்ப்>ப்ப்)  

   (2) *குழய்ப்பு > குழப்பு/-அம் (ய்>0/-ப்ப்) 

   (3) குழப்பு + அம்>குழப்பம் 

15 (1) *கலய்ங்க்உ[-செ.பொ.] > கலய்க்கு (ங்க் > க்க்) 

   (2) *கலய்க்கு > கலக்கு/-அம் (ய்> 0/-க்க்)   

   (3) கலக்கு + அம் > கலக்கம் (-உ> 0/-உயிர்)    

இந்த ஆய்வானது அடங்கு/அடக்கம்-அடக்கு, திருந்து/திருத்தம்-திருத்து, மயங்கு/மயக்கம்-மயக்கு முதலான பல வினைகளுக்கும் வினைப்பெயர்களுக்கும் பொருந்தும். 

  1. இனி வீழ்த்து, புகுத்து, தாழ்த்து, நிறுத்து, சேர்த்து, அருந்து முதலிய முற்றுவினைப்பகுதிகளின் தோற்றத்தினை ஆராயலாம். இவை பழந்தமிழிலும் இடைக்காலத் தமிழிலும் இறந்தகாலப் பகுதிகளாக (Past Bases) காணப்பட்டாலும் பிந்தியவற்றோடு அவற்றைத் தொடர்புபடுத்த முடியாது. வீழ்த்து என்பது விழுத்து எனவும் வழங்குகிறது. செல் என்ற வினையின் செயப்படுபொருள் செயப்படுபொருள் குன்றாவினைப்பகுதி செலுத்து என்பதாகும். துகரவீற்று வினைப்பகுதிகள் தொடர்பான ஆய்வில் இதனையும் கருத்தில் கொள்ளவேண்டும். காய்க்கு, காய்ச்சு ஆகியவற்றின் அடிநிலை வடிவத்தில் மெல்லொற்று இடம்பெற்றதைப்போல் வீழ்த்து, புகுத்து முதலானவற்றின் அடிநிலை வடிவங்களிலும் மெல்லொற்று இடம்பெற வேண்டும், இல்லையெனில் துகரத்தின் முன் நிகழும் தகர வல்லொற்றின் நிகழ்ச்சியை விளக்கமுடியாது. இங்கே குறிக்கப் பெற்றுள்ள துகரவீற்று வினைப்பகுதிகளை ஒரு குறிப்பிட்ட வாய்பாட்டுத் தெரிநிலைப் பொதுவினைமுற்றுடன் தொடர்புபடுத்த முடியுமெனில் அதனைப் புறநானூற்றில் நிகழும் செயுந்து வாய்பாட்டு இறவாக்காலப்  பொதுவினையாக இனங்காணலாம். செயுந்து வாய்பாட்டு வினைகள் தொல்திராவிடத்தில் *கெயுந்த்உ வாய்பாட்டினவாக மீட்டுருவாக்கம் செய்யத்தக்கனவாகும். *கெயுந்த்உ வாய்பாட்டு வினைகள் கன்னடத்தில் கெயுத்து வாய்பாட்டினவாகத் திரிந்து எழுவாய்க்குரிய இயைபு விகுதிகளை ஏற்கின்றன. எ-டு. *நடெயுந்த்உ > நடெயுத்து> நடெயுத்தானெ ‘நடப்பான் / நடக்கிறான்‘. 
  2. பழந்தமிழில் நிகழும் இழத்தும் (குறள்.250) ‘இடிப்போம்’, அளித்தி (பதி.79.3) ‘அளிப்பாய்’ மறைத்திர் (குறள்.318) ‘மறைப்பீர்’, மறைத்தல் (<மறைத்து+அல்) ஆகியவற்றில் காலப் பகுதியாக நிகழும் இழத்து (<இழயுத்து), அளித்து (<அளியுத்து), மறைத்து (<மறையுத்து) ஆகிய வடிவங்கள் *கெயுந்த்உ வாய்பாட்டு வினைகளின் திரிபாகும். ஓர் எடுத்துக்காட்டின் வாயிலாக இதனை விளக்கலாம். எ-டு. *இழயந்த்உ> இழயுத்து > இழய்த்து > இழத்து. திரிந்து ஒடுங்கிய இழத்து போன்ற காலப்பகுதிகள் தமிழ்க்கிளைமொழிகளில் வினைப்பகுதிகளாக நிகழத்தொடங்கி வீழ்த்து, செலுத்து, அருந்து முதலான வினைப்பகுதிகள் தோற்றம் கொண்டன. இந்த வகையில் செலுத்து, வீழ்த்து, தாழ்த்து, புகுத்து, நிறுத்து, சேர்த்து, அருந்து ஆகியவற்றின் அடிநிலை வடிவங்களை முறையே *செலுந்த்உ, *வீழுந்த்உ, *தாழுந்த்உ, *புகுந்த்உ, *நிறுந்த்உ, *சேருந்த்உ, *அருந்த்உ எனக் குறிக்கப்படும். இவற்றுள் *அருந்த்உ என்ற பொது வினைப்பகுதி தன்வினையாயின் (Internal Transitive) அருந்து என்ற வடிவமும் பிறவினையாயின் (External Transitive) அருத்து என்ற வடிவமும் தோன்றி நிகழும். *வீழுந்த்உ, *தாழுந்த்உ, *சேருந்த்உ ஆகியவற்றைப் பொறுத்தவரையில் உகரம் கெடுதலும் நகரம் தகரமாகத் திரிதலும் தவிர்க்க முடியாததாகும். கருதுக: *வீழுந்த்உ > *வீழுத்து > வீழ்த்து. அடிநிலை வடிவத்தில் உகரத்தின் நிகழ்ச்சியை விழுத்து என்னும் வினைப்பகுதியில் நிகழும் உகரம் உறுதிப்படுத்துகிறது. இதேபோல் வீழ்க்குவன் (பட்.272), வீழ்க்கும் (கலி.97.17), வீழ்க்க, வீழ்க்கின்று ஆகியவற்றில் நிகழும் வீழ்க்கு என்னும் முற்று வினைப்பகுதியும் பின்வருமாறு வருவிக்கப்படும். 

16 (1) *வீழுங்க்உ > வீழுக்கு (ங்க் > க்க்)  

(2) வீழுக்கு > வீழ்க்கு (உ>0/-க்க்) 

  1. இங்கே முன்மொழிந்த ஆய்வின் அடிப்படையில் இறவாக் காலப் பொதுவினைமுற்றுக்கள் (Non Past Impersonal Finite Verbs) முற்று வினைப்பகுதிகளாக (Finite Verbal Bases) நிலை மாறி நிகழும் இயல்பின என்ற கருதுகோளை வகுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இந்தக் கருதுகோள் காய்ச்சு, கலங்கு, கலக்கு முதலான தமிழ்வினைப் பகுதிகளும் காஞ்ச்உ, தெறச்உ, மறச்உ, நடச்உ, குடிச்உ (<*குடிய்க்கு) முதலான தெலுங்கு வினைப்பகுதிகளும் தொடக்கத்தில் இறவாக்காலப் பொது வினைமுற்றுக்களாக நிகழ்ந்தவை என்று துணிய வகைசெய்கிறது. தமிழில் முற்று வினைப்பகுதிகளாக நிகழும் மூட்டு, காட்டு, ஊட்டு ஆகியவையும் இவை போன்றவையும் *செயுந்த்உ வாய்பாட்டு அடிநிலைகளின்மீது தோன்றியவையாகும். மூட்டு, காட்டு ஆகியவை *மூளுத்து (<*மூளுந்த்உ), *காணுத்து (<*காணுந்த்உ) ஆகிய அடிநிலைகளினின்றும் பெறப்பட்டவையாகும். கருதுக: *மூளுத்து > மூள்த்து > மூள்ட்டு > மூட்ட்டு > மூட்டு; காணுத்து > காண்த்து > காண்ட்டு > காட்ட்டு > காட்டு. மூட்டு, காட்டு ஆகியவை மூள், காண் ஆகிய முதன்மை வினைப்பகுதிகளைக் கொண்டவையாகும். கோட்பாட்டு நிலையில் இந்த முதன்மை வினைப்பகுதிகளைப் பொது வினைப்பகுதிகளாகத்தான் கருதமுடியும். ஊட்டு என்னும் முற்று வினைப்பகுதியானது ஊண் என்னும் முதன்மை வினைப்பகுதியைக் கொண்டதாகும். தமிழில் ஊண் என்பது உணவு என்னும் பொருண் மையதாயினும் இது வினையாகவும் செயல்படவல்லது என்பதை ஊட்டு என்பதன் அடிநிலையாகிய *ஊணுத்து என்பதில் காணலாம். ஊண் என்பது தொல் தமிழிலோ (Pre Tamil), (தென்) தொல்திராவிடத்திலோ (Proto (South) Dravidian) வினையாக நிகழ்ந்திருக்கவேண்டும். 

செயப்படுபொருள் குன்றிய வினையானது குன்றா வினைக்குப் பகுதியாக இருக்க -முடியாது. குன்றிய வினை எப்பொழுதும் குன்றிய வினைதான். ஒரு விகுதியானது செயப்படுபொருள் குன்றிய வினையைக் குன்றா வினையாக மாற்றவல்லது என்ற நடைமுறைக் கோட்பாட்டினை ஏற்க முடியாது. இந்தப் பின்னணியில் மூட்டு, காட்டு, ஊட்டு ஆகியவற்றின் அடிநிலைகள் தொல்திராவிடத்தில் செயப்படுபொருள் குன்றிய வினை – குன்றாவினை தொடர்பான கோட்பாட்டினை மறுபரிசீலனைக்கு உரியதாக்குகின்றது. 

  1. காய்ச்சு (தமிழ்), காஞ்ச்உ (தெலுங்கு) ஆகிய வினைப்பகுதிகளில் சகரத்தின் நிகழ்ச்சிக்கான பின்புலம் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும். தேய்ந்து, தேய்த்து ஆகியவை பேச்சுத் தமிழில் தேஞ்சு, தேச்சு எனத்திரிந்து வழங்குதல் ஓர் இயல்பான நிகழ்ச்சியாகும். ஆனால் காய்ச்சு, காஞ்ச்உ ஆகியவற்றின் அடிநிலை வடிவம் *காய்ங்க்உ என்பதாகும். இந்த அடிநிலை வடிவத்தினின்றும் காய்க்கு பெறப்பட்டாலும் காய்ச்சு, காஞ்ச்உ ஆகியவற்றை இதனின்றும் நேரடியாக வருவிக்க முடியாது. இவற்றைக் *காய்ந்த்உ என்பதன் திரிபாகக் கொள்ள வாய்ப்பில்லை. ஏனெனில் காய்க்கு என்ற வடிவத்தை காய்ந்த்உ என்பதன் திரிபாகக் கொள்ள வாய்ப்பில்லை. காய்க்கு, காய்ச்சு, காஞ்ச்உ ஆகிய மூன்றும் *காய்ங்க்உ என்ற ஒற்றை அடிநிலை வடிவத்தின் திரிபுகளாகும். அப்படியானால் காய்ச்சு, காஞ்ச்உ ஆகியவற்றில் நிகழும் சகரத்தினை எங்ஙனம் விளக்குவது? 
  2. குடிக்கிறான், கலைக்கிறான், தேய்க்கிறான் ஆகிய வினைகள் குமரிக்கிளை மொழிகளில் குடிக்கான் / குடிக்யான் / குடிக்கியான் / குடிச்சியான், கலைக்கான்/ கலைக்யான் / கலைச்சியான், தேய்க்கான் / (தேய்க்யான்)/தேய்க்கியான்/தேய்ச்சியான் வழங்கும். இவ்வாறே குடிக்கும், கலைக்கும், தேய்க்கும் ஆகிய செய்யும் வாய்பாட்டு வினைகள் குமரிக்கிளை மொழிகளிலும் காணிக்காரப் பழங்குடியினர் மொழியிலும் குடிச்சும், கல(ய்)ச்சும், தே(ய்)ச்சும் எனத்திரிந்து வழங்கும். யகரவீற்று வினைப்பகுதிகளைக் கொண்ட வினையமைப்புக்களில் மட்டுமே இத்தகைய திரிபு வடிவங்களின் நிகழ்ச்சி காணப்படுகிறது. குடிக்யான், குடிச்சியான் ஆகியவற்றில் நிகழும் யகரமானது இகரவீற்று வினைப்பகுதிகளை யகரவீற்று வினைப்பகுதிகளாக மீட்டுருவாக்கம் செய்ய வகை செய்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு குடி என்னும் இகரவீற்று வினைப்பகுதியின் தொல்வடிவம் *குடிய் என்று கொள்ளப்படும். ஐகாரவீற்று வினைப்பகுதிகள் அனைத்தும் அய் ஈற்றனவாகக் கொள்ளத்தக்கனவாகும். *குடிய் என்ற வினைப்பகுதி குடிக்கான் என்பதில் ஈற்று யகரத்தை ஒரு கிளைமொழியில் இழக்கிறது. குடிக்யான் (<*குடிக்க்யான்) என்பதில் யகரம் இடம்பெயர்ந்து காலக்கிளவியை அடுத்து நிகழ்கிறது. இதன் விளைவாகக் *குடிக்க்யான் என்ற இடைநிலை வடிவம் தோன்றி அது குடிக்யான் எனத் திரிந்து வழங்குகிறது. *குடிக்க்யான் என்பதில் இடம்பெயர்ந்த யகரத்தின் முன் இகரம் ஒலித்துணையாக நிகழ்ந்து குடிக்கியான் என்ற வடிவத்தை தோற்றுவிக்கிறது. குடிச்சியான் எப்படித்தோன்றி நிகழ்கிறது? *குடிக்க்யான் என்பதில் வினையடியீற்று யகரம் இடம்பெயர்ந்து இரட்டித்த ககரங்களின் முன் நிகழ்கிறது. இதன் விளைவாக யகரத்தின் முன் நிகழும் இரட்டித்த ககரங்கள் சகரங்களாகத் திரிந்து *குடிச்ச்யான் என்ற வடிவம் தோற்றம் கொள்கிறது. யகரத்தின் முன் ஒலித்துணை இகரம் செருகப்பட்டு குடிச்சியான் என்ற கிளைமொழி வழக்கு தோன்றி நிகழ்கிறது. இரட்டித்த ககரங்கள் சகரங்களாகத் திரிவதற்கு எழுத்தியல் உந்துதலாக அமைவது இடம்பெயர்ந்து (அல்லது பிரதி செய்யப்பட்டு)அவற்றின் பின் நிகழும் யகரமேயாகும். 
  3. தமிழிலும் தெலுங்கிலும் திரிந்து நிகழும் ச்ச், ஞ்ச் ஆகிய மெய்ம்மயக்கங்களுக்குப் பின்வரும் மாறுபட்ட இரு வகை அடிநிலை  மெய்ம்மயக்கங்கள் உந்துதலாக அமைகின்றன. 

17 (1) ய்த்த் > ய்ச்ச் > ச்ச் 

எ-டு. தேய்த்து > தேய்ச்சு> தேச்சு 

*பறிய்த்து > *பறிய்ச்சு > பறிச்சு 

கலய்த்து > கலய்ச்சு> கலச்சு 

 (2) ய்ந்த்> ய்ஞ்ச் >ஞ்ச் 

எ-டு. தேய்ந்து> தேய்ஞ்சு > தேஞ்சு 

*அரிய்ந்து > *அரியஞ்சு> அரிஞ்சு 

கலய்ந்து > கலய்ஞ்சு > கலஞ்சு 

18 (1) ய்ங்க்உ > ய்க்கு 

 எ-டு. *காயுங்க்உ> காயுக்கு>காய்க்கு (முற்று வினைப்பகுதி) 

(2) ய்க்க் > ய்க்க்ய் > ய்ச்ச்ய்ய்ச்ச் 

எ-டு. *காய்க்கு > காய்க்க்யு> காய்ச்ச்யு > காய்ச்சு 

(3) ய்க்க் > க்க்ய் > க்கிய் 

எ-டு. *குடிய்க்கான்> குடிக்க்யான்> குடிக்கியான் ‘குடிக்கிறான்’ 

(4) ய்க்க் க்க்ய் > ச்ச்ய் ச்சிய 

எ-டு. *குடிய்க்கான்>குடிக்க்யான்>குடிச்ச்யான்>குடிச்சியான் 

   ‘குடிக்கிறான்’ 

(3) ய்க்க் > ய்ச்ச்>ச்ச் 

எ-டு.*குடிய்க்கும்> குடிய்ச்சம்>குடிச்சும் ‘குடிக்கும்’ 

(4) ய்ங்க் > ய்ஞ்ச்ய்>ஞ்ச்ய்>ஞ்ச்) 

எ-டு. *காய்ங்க்உ> காய்ஞ்ச்உ > காய்ஞ்ச்உ> 

காஞ்ச்உ (தெலுங்கு) ‘காய்ச்சு’ 

*கலய்ங்க்>கலய்ஞ்உ> கலஞ்ச்உ (தெலுங்கு) ‘கலக்கு’ 

குடிச்சும், வளைச்சும் முதலிய செயும் வாய்பாட்டுத் தமிழ் வினைவடிவங்களையும் காஞ்ச்உ, கலஞ்ச்உ ஆகிய தெலுங்கு வினையடிகளையும் ச்ச், ஞ்ச் ஆகிய மெய்ம்மயக்கங்களை ய்க்க, ய்ங்க் ஆகிய அடி நிலைகளிலிருந்து நேரடியாகப் பெறமுடியும். ஆனால், குடிக்கியான், குடிச்சியான் ஆகிய வினைவடிவங்களை ய்க்க், என்பதை க்க்ய் என யகரத்தை இடம்பெயர்ப்பதன்மூலம் பெறமுடியும். ய்க்க், ய்ங்க் (yn[g]) ஆகிய மெய்ம்மயக்கங்களில் யகரம் கெட்டு நிற்கும் போக்கினையும் தமிழிலும் தெலுங்கிலும் காணலாம். எ-டு. *குடிய்க்கான் குடிக்கான், *குடிய்க்க > குடிக்க, *குடிய்க்கும் > குடிக்கும், *கலய்ங்கு> கலங்கு, கலய்க்கு > கலக்கு; *காய்ங்கு > காங்கு (தெலுங்கு) ‘காய்(தல்)’. 

16. இந்த எழுத்துரையை முடிப்பதற்குமுன் பின்குறிப்பாக ஒரு செய்தியைக் குறிப்பிடவேண்டும். ஒரு வினையடியை அடுத்து ஒரு விகுதி சேர்ந்த நிலையில் பெறப்படும் வினையமைப்பு வினைமுற்றாகவே கருதப்படும். அது எவ்வகை வினைமுற்றாகவும் இருக்கலாம். தொடக்கத்தில் இத்தகைய வினையமைப்புகள் பொது வினைமுற்றுக்களாக நிகழ்ந்து பல்வேறு பயனிலைகளாகச் செயல்பட்டுப் பின்னர் அவை எச்சவினைகளாகவும் (எ-டு. தண்வரல் வாடை/குறுந். வீங்குசெலல் மண்டிலம் / புறம். 8. வினைசெயல் வகை / திருக்குறள். அதிகாரத் தலைப்பு) முற்றுவினைப் பகுதிகளாகவும்
(எ-டு. காய்க்கு, பாய்க்கு) பெயர் நிலைக் கிளவிகளாகவும் (எ-டு. சுடர், களை) நிகழத் தொடங்கினவாகத் துணியலாம். களை, சுடர் ஆகியவை எடுத்துக்காட்டாக குறிப்பாகத் தொல் திராவிடத்துக்கு முந்திய நிலையில் கள்+ஐ, சுடு+அர் என்ற அமைப்பிலான பொதுவினை முற்றுக்களாக நிகழ்ந்திருக்க வேண்டும். இந்த அமைப்புகளில் நிகழும் விகுதிகள் இலக்கண பொருண்மையை இழந்து முதன்மை வினைப்பகுதிகளின் ஒருங்கிணைந்த உறுப்புகளாக நிகழத் தொடங்கியிருக்க வேண்டும். வண்ணனை நிலையில் வழக்கில் உள்ள கலங்கு / கலக்கு, குழம்பு / குழப்பு, காய்ச்சு, கொடுக்கு முதலான முற்றுவினைப்பகுதிகள் தொடர்பான அடிநிலைகள் பற்றிய ஆய்வின் தொடர்ச்சியாக அலை, வளர், சுழல், மகிழ், புரள், பிழி, நட முதலான முற்று வினைப்பகுதிகளின் ஆய்வினைக் கருத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய ஆய்வானது வரலாறு மற்றும் ஒப்பீட்டு மொழியியல் பின்னணியில் நிகழவேண்டும்.

 

சுருக்க விளக்கம்

அகம் அகநானூறு 

கலி கலித்தொகை

நற் நற்றிணை

பத்துப் பத்துப்பாட்டு

பதி பதிற்றுப்பத்து 

புறம் –  புறநானூறு 

கருவி நூல்கள் 

தாமரை மணாளன், 2002. சில்லுக்கருப்பட்டி. சென்னை (கல்கி இதழில் வெளிவந்து முற்றுப்பெறாத தொடர்). 

Krishnamurti.Bh,1972 (First Edition 1971). Telugu Verbal Bases-A Comparative and Descriptive Study. Delhi, Motilal Banarsidas.