சங்க இலக்கியங்களைப் பாடியவர்கள்: அப்பாடல்களைத் தொகுத்தவர்கள்; அப்பாடல்களுக்கு உரை எழுதியவர்கள்; ஓலையிலிருந்து அச்சில் பதிப்பித்தவர்கள்; அப்பாடல்களை பல்வேறு கண்ணோட்டங்களில் ஆய்வு செய்தவர்கள் என்று சங்க இலக்கியம் ஐந்து கட்டங்களைக் கடந்து இப்போது ஆறாவது கட்டத்தில் இருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கடந்த இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறோம். செவ்விலக்கியப் பண்பைக் கொண்டுள்ள இப்பிரதிகள், காலந்தோறும் புதிய புதிய வாசிப்புகளை வேண்டி நிற்கிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்த வாசிப்புகளை உள்வாங்கி, புதிய வாசிப்புகளை நிகழ்த்த வேண்டும். இப்பின்புலத்தில் சங்க இலக்கியப் பிரதிகளை வாசிப்பதற்கு அவற்றைக் காலநிரல்படுத்துவதும் தேவைப் படுகிறது. சங்கப் பிரதிகளை வாசிப்பதற்குக் காலநிரல்படுத்துதல் கூடுதல் வசதியாக அமையக்கூடும்.
செவ்விலக்கியங்கள் மற்றும் இலக்கணங்களைக் காலநிரல் படுத்தும்போது குறிப்பிட்ட காலத்தில் தொடங்கி, குறிப்பிட்ட காலப் பகுதியில் வளர்ச்சியின் உச்சத்தை அடைகிறது. இவ் வளர்ச்சியின் போக்கை அப்பிரதிகளின் ஊடாகக் கண்டறியும் தேவையுண்டு. சங்க இலக்கியப் பிரதிகள் அனைத்தையும் ஒரே கோவையாகக் கருதுதல் கூடாது. செவ்விலக்கியப் பனுவல்கள் அனைத்தையும் அவை எப்போது உருப்பெற்று, எவ்வகையில் வளர்ச்சி பெற்றுள்ளன என அணுகும் பார்வை தேவை. அத் தன்மையின்றி, தொகுத்தவர்கள் கொடுத்திருக்கும் முழுமையை அடிப்படையாகக் கொள்ள இயலாது. இவ்வகையில் அப்பிரதி களை அணுகாமல் முழுமையாகப் பார்ப்பதால், அவற்றுள் முரண் பாடுகள் இருப்பதாகக் கருதும் தன்மை உருவாகிறது. இப் பின்புலத்தில் சங்கப் பிரதிகளை எவ்வகையில் காலநிரல்படுத் தலாம் என்ற உரையாடல் இங்கு நமது நோக்கம்.
பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை, கமில்சுவலபில், வ.அய்.சுப்பிரமணியம் ஆகியோர் சங்கப் பிரதிகளைக் கால நிரல்படுத்தும் பணியைச் செய்துள்ளனர். தொகை நூல்களின் காலமுறை’, ‘பத்துப்பாட்டும் அவற்றின் காலமுறையும்’ என்ற இரு கட்டுரைகளை, ச. வையாபுரிப்பிள்ளை எழுதியுள்ளார் (வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம்; தொகுதி, 1989: 186, 134), இவர், பாடல்களின் அடி அளவு, தொகுக்கப்பட்டிருக்கும் முறை, பாடல்களில் காணப்படும் செய்திகள், சொற்கள் ஆகியவற்றைக் கொண்டு காலநிரல்படுத்தும் பணியைச் செய்துள்ளார். அவ் வகையில், “குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு” என்று முறையே கால வரிசைப்படுத்துகிறார் (1989; 193).
கலித்தொகையையும் பரிபாடலையும் இவ்வரிசையில் கொண்டு வராமல் தனித்து நிரல்படுத்துகிறார். இவற்றைத் தொகை நூல்களில் தனியாகவே வைத்து மதிப்பிடுகிறார். தொகுத்தோருக்கும் பிரதிகளின் கால நிரல்படுத்துதலுக்கும் தொடர்பு குறைவு என்றே கருதவேண்டும். தம் காலத்துக்கு முன்பிருந்த பிரதிகளைத் தமது வசதிக்கேற்பத் தொகுத்துக் கொள்ளும் உரிமை தொகுப்பாளர்களுக்கு உண்டு.
எட்டுத்தொகை நூல்களைப் போலவே பத்துப்பாட்டில் உள்ள ல்களையும் வையாபுரிப்பிள்ளை கால நிரல் படுத்தியுள்ளார். (1989: 134) பொருநராற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு, மலை படுகடாம், மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை என நிரல்படுத்து கிறார். இதில் திருமுருகாற்றுப்படை, “பல நூற்றாண்டுகள் பிற்பட்டு இயற்றப் பெற்றதாதல் வேண்டும்” (1989: 114) என்று பதிவு செய்கிறார். இவ்வகையில் பத்துப்பாட்டுப் பிரதிகளை வாசிப்பதற்குக் காலநிரலை வையாபுரிப்பிள்ளை வழங்கியுள்ளார். சங்க இலக்கியங்களில் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப் படை ஆகிய மூன்று பிரதிகளையும் சங்கத்தொகை நூல்களோடு இணைத்துப் பார்க்காமல் தனித்துப் பார்க்கிறார். கால நிரல் படுத்தும்போது இவைகளைத் தனித்து வைக்கிறார். வையாபுரிப் பிள்ளை சங்கப்பிரதிகளின் காலநிரலை இவ்வகையில் அறிமுகப் படுத்திய முறை, சங்கப் பாடல்களை வாசிக்கப் பெரிதும் உதவுகிறது. இவரின் இவ்வகையான காலநிரல்படுத்துதலை. வேறு வகையிலும் உறுதிப்படுத்த இயலும் என்பது இந்த உரையாடலின் மையப்புள்ளியாகும்.
பேராசிரியர் கமில்சுவலபில், பேரா. வையாபுரிப்பிள்ளையின் கருத்தை உறுதிப்படுத்துகிறார். கலித்தொகை, பரிபாடல், திரு முருகாற்றுப்படை ஆகியவற்றைப் பழமையான சங்கப் பிரதி களிலி ருந்து நீக்கிவைக்க வேண்டும் என்கிறார். கருத்துநிலை, பாடலின் சொல் மற்றும் தொடர் அமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பிரதிகள் பிற பிரதிகளிலிருந்து வேறு படுவதாகக் கருதுகிறார் (1975:99). கலித்தொகை, பரிபாடல் ஆகியவற்றின் யாப்பு குறித்தும் அத்தன்மை பிற பிரதிகளி லிருந்து பெரிதும் வேறுபடுவதையும் விரிவாக ஆய்வு செய்து உள்ளார் (1975: 100, 101). திருமுருகாற்றுப்படை பதினோராம் திருமுறையில் இடம்பெற்றிருப்பதன் மூலம் அதன் காலம் 8பின்தள்ளிப் போவதையும் ஆய்வு செய்துள்ளார் (1975: 105). தமது கருத்தை உறுதிப்படுத்த வையாபுரிப்பிள்ளையின் கருத் தையும் மேற்கோள் காட்டுகிறார் (1975: 105). கமில்சுவலபில் சங்கப் பாடல்களைப் பாடிய புலவர்களின் காலத்தை அடிப் படையாகக் கொண்டும் சங்கப் பிரதிகளைக் காலநிரல்படுத்த முயல்கிறார் (1975: 107). இவ்விதம் நிரல்படுத்தும்போது நற்றிணை, ஐங்குறுநூறு, அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு, பதிற்றுப் பத்து என்று தொகைநூல்களை நிரல்படுத்துகிறார். பொரு நராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை, திருமுரு காற்றுப் படை எனப் பத்துப் பாடல்களை நிரல்படுத்துகிறார் (1975: 107).
பேராசிரியர்கள் வையாபுரிப்பிள்ளையும் கமில்சுவலபில் 91அவர்களும் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய பிரதிகளைக் காலநிரலில் பின்வைப்பதை நாம் காண முடிகிறது. இருவரும் வெவ்வேறு கோணங்களில் சங்கப் பிரதி களை அணுகி மேற்குறித்த முடிவுகளை முன்வைக்கிறார்கள். இம்முடிவுகள் சங்கப் பிரதிகளை வாசிப்பதற்குப் புதிய பரி மாணத்தைத் தருகின்றன. இதை அடியொற்றி, சங்கப்பிரதி களைப் பல தொகுதிகளாகக் கட்டமைத்து வாசிக்கும் தேவை உருவாகிறது.
வ.அசுப்பிரமணியம், ‘சங்க நூற்களின் காலம்’ (1989:27) எனும் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் இக்கட்டுரை, பாரியில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு (1970) நடந்தபோது வாசிக்கப்பட்டது ஒலியியல், சொல்லமைப்பியல், சந்தி, வாத்திய இயல் சொற்கோவை. பொருள் மாற்றம் ஆகியவற்றை அடிப்படையாகல் கொண்டு மொழியியல் நோக்கில் சங்கப் பிரதிகளின் காலத்தை இவர் ஆய்வு செய்துள்ளார். குறுந்தொகை, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு, புறநானூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு. நற்றிணை, கலித்தொகை, பரிபாடல், சிலப்பதிகாரம் என்று இவர் வரிசைப்படுத்துகிறார் இதில் பத்துப்பாட்டை முழுமையாக எடுத்துக்கொண்டிருப்பதைக் காண்கிறோம். தொகுக்கப்பட்ட பத்துப் பாடல்களையும் ஒரே பிரதியாக எப்படி மேற்கொண்டார்? என்பது புதிராக இருக்கிறது. எனவே இவரது காலநிரல்படுத்துதலில் திருமுருகாற்றுப்படையின் காலம் குறித்து அறிந்துகொள்ள இயலவில்லை, இந்த முறை யினை ஏற்பது இயலாது. ஆனால், தொகை நூல்களில் கலித் தொகையும் பரிபாடலும் இறுதியாகவே இவரது ஆய்விலும் நிரல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மேற்குறித்த பேராசிரியர் களின் முடிவுகளோடு இவரும் ஒத்துப்போவதைக் காண முடிகிறது. பேராசிரியர்களின் சங்கப் பிரதிகள் குறித்த கால நிரல்படுத்துதலை இவ்வகையில் நாம் புரிந்துகொள்கிறோம். சங்கப் பிரதிகள் காலநிரல் குறித்து வேறு யாரும் முழுமையான உரையாடலுக்கு உட்படுத்தியதாகக் காணமுடியவில்லை. இவர்களின் ஆய்வுகளின் மூலம் கலித்தொகை, பரிபாடல். திருமுருகாற்றுப்படை (வ.அய்.சு.நீங்கலாக) ஆகிய பிரதிகள் தொகுப்பாளர்களின் வசதி நோக்கி, பழம் பிரதிகளோடு தொகுக்கப்பட்ட பிற்காலப் பிரதிகள். பழம் பிரதிகள் கி.பி.4ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை எனில் இவை கி.பி.7. 8,9ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவையாகக் கொள்ளலாம். சங்கப் பிரதிகளின் மேல் எல்லை கி.மு.5.50 எனில் கீழ் எல்லை கி.பி.400 என்று கொள்ளலாம். ஆனால் கலித்தொகை, பரி பாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றின் மேல் எல்லை கி.பி.5ஆம் நூற்றாண்டு எனில் கீழ் எல்லை கி.பி.9ஆம் நூற்றாண்டு வரை .அமையலாம். தமிழ்ச் சூழலின் நீண்ட கால நிகழ்வுகளின் ஊடாக உருவான பாடல்களைத் தொகுப்பாளர்கள் தமது சமகாலக் கண்ணோட்டத்தோடு செய்துள்ளனர். இப்பணி கி.பி.6ஆம் நூற்றாண்டு தொடங்கி 9ஆம் நூற்றாண்டுக்குள் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
மேற்குபித்த போராசிரியர்கலின் காலதிரல் படுத்தல் முறை அடை அசாகக் கொள்ளாது, வேறு வகையில் சங்கப் பிரதிகளை நிரல்படுத்த இயலுமா’ எனும் உரையாட இங்கு மேற்கொள்ளப்பஇபுலத்தில் சங்கப் பிரதிகளை நான்கு தொகுதிகளாக வகைப்படுத்தி வாசிக்கும் முறையினை இயல் முன்வைக்கிறது.
தொகுதி ஒன்று
நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறுபதிற்றுப்பத்து
தொகுதி இரண்டு
பொருநராற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை, குறிஞ்சிப் பாட்டு. மலையடுகடாம். பட்டினப்பாலை. முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை
தொகுதி மூன்று
கலித்தொகை
தொகுதி நான்கு
பரிபாடல், திருமுருகாற்றுப்படை.
மேற்குறித்தவாறு நான்கு தொகுதிகளாக வகைப்படுத்தல் என்பது பாடல்களில் காணப்படும் பொருண்மைகளை அடிப் படையாகக் கொண்டது. சங்கப் பாடல்கள் வழி அறியலாகும் வழிபாட்டுமுறைகள். நம்பிக்கைகள், சடங்குகள் முதலியவற்றின் அடிப்படையிலும் அவற்றின் காலத்தை வரிசைப்படுத்தலாம். மலைகளில் தெய்வங்கள் உறைவதாகச் சங்கப் பாடல்களில் காண்கிறோம். (நற். 165, 250; அகம், 23, 72, 348, 372, 376: புறம். 15S; ஐங். 255), காடுகளில் கடவுள் உறைவதாகவும் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன (பதிற். 13: 2022; பொருந.4752). மரங்களிலும் கடவுள் இருப்பதாகப் பாடல்கள் மூலம் அறிகிறோம் (குறுந். 15, 87; நற். 216, 343; பதிற். 886: அகம், 309), நீர்த்துறைகளைக் கடவுள் உறையும் இடங்களாகச் சங்கப் பாடல்கள் கூறுகின்றன (நற். 34; அகம். 110; ஐங், 28, 53, 182), இவ்வகையில் இயற்கையோடு இணைந்து கடவுளைப் பற்றிய கருத்துருவாக்கம் உருவாகியிருப்பதைக் காணமுடிகிறது. இவ்வகையான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் பல்வேறு சடங்குகளும் நடைமுறையில் இருந்ததைச் சங்கப் பாடல்கள் வழி அறிகிறோம்.
சடங்குகள் என்பவை மனித சமூக வாழ்க்கையில் இரண்டறக கலந்தவை வேட்டை மற்றும் நாடோடிJ சமூகம், பழங்குடி,J சமூகம். ஊரிருக்கைச் சமூகம் என்பவை மனித சமூக உரு வாக்கத்தில் படிநிலைகள் ஆகும். ஒவ்வொரு வகை சமூகமும் ஒவ்வொரு வகையான நம்பிக்கைகளை உருவாக்கிக் கொண்டதை நாம் அறியலாம். புறச்சூழல்களை எதிர்கொள்வதற்கான எதிர் விளைவுகளாக நம்பிக்கைகள் அமைகின்றன. நம்பிக்கைளை நிகழ்த்திக் காட்டுபவையாகச் சடங்குகள் அமைகின்றன. மக்கள் தங்களுடைய இருப்பை நிலைப்படுத்திக்கொள்ள சடங்குகளை நிகழ்த்துகின்றனர். எனவே சடங்கும் இடைவெளியற்றுச் சமூகத்தில் செயல்படுவதைக் காண்கிறோம். சடங்குகள் உடல் மொழியாகவும் வாய்மொழியாகவும் வெளிப்படுகின்றன. இவையே இலக்கியப் பிரதிகளாகவும் வடிவம் பெறுகின்றன. இலக்கியப் பிரதியை உருவாக்கும் கலைஞன் மக்களின் வாழ்க் கையைச் சடங்குகளாகப் பார்த்து அதனை உள்வாங்கிக் கொள் கிறாள். அவை அவனது ஆக்கங்கள் ஆகின்றன. செவ்விலக்கியப் பிரதிகளில் இத்தன்மையை நாம் விரிவாகக் காணமுடியும்.
சங்கப் பிரதிகளைக் கால நிரல்படுத்துவதற்குச் சடங்குகளை அடிப்படைத் தரவாகக் கொள்ளும் முயற்சி இங்கு மேற்கொள்ளப் பெறுகிறது. சங்க காலச் சடங்குகள் குறித்து மு. சண்முகம் பிள்ளை (1996), அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி (2000), ஜே.வாசெக் (2007) ஆகியோர் விவாதித்துள்ளனர். ஆனால் சடங்குகளை அடிப்படையாகக் கொண்ட காலநிரல்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை என்றே கூறலாம். சங்க இலக்கியத்தில் பல்வேறு சடங்குகள் குறித்த விவரங்கள் கிடைத்தாலும் வெறி யாட்டு, பலி, நடுகல் ஆகிய மூன்று சடங்குகள் தொடர்பான சங்க இலக்கியப் பதிவுகளை மட்டும் அடிப்படைத் தரவாகக் கொண்டு, சங்கப் பிரதிகளின் காலநிரல்படுத்தம் தொடர்பான உரையாடல் இங்கே மேற்கொள்ளப்படுகின்றது.
காமத்தால் தாக்கப்பட்ட பெண்மீது அணங்கு குடியேறி விடுகிறது. அணங்கை வெளியேற்ற வேண்டும். இந்த அணங்கை வெளியேற்றும் சடங்கை ‘வெறியாடல்’ என்று சங்க இலக்கியம் பேசுகிறது. இச்சடங்கு சங்கப் பிரதிகளில் பரவலாக இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றில் முறையே பல பாடல்களில் வெறி யாடல் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மூன்று இலக்கியப் பிரதிகளிலும் ஏறக்குறைய 30 இடங்களில் இச்சடங்கு குறித்த தகவல்கள் பதிவாகியுள்ளன. குறுந்தொகையில் 5 இடங்களில் இச்சடங்கைப் பற்றிப் பேசப்படுகின்றது. பதிற்றுப்பத்தில் ஒரு இடத்தில் பேசப்படுகின்றது. எனவே, சங்கப் பிரதிகளை வாசிப்பதற்கு வசதியாகப் பாகுபடுத்திக் கொண்ட முதல் தொகுதியில் சுமார் 36 இடங்களில் வெறியாடல் சடங்கு குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் தொகுதியாக அமையும் சங்கத் தொகுதிகளில் மூன்று இடங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி ஆகியவற்றில் தலா ஓர் இடத்தில் மட்டும் இடம் பெற்றுள்ளது. மூன்றாம் தொகுதியான கலித்தொகையில் இடம்பெறவில்லை. பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப் படையில் தலா ஒருமுறை இடம்பெற்றுள்ளது. முதல் தொகுதியில் இச்சடங்கு மிகுதியாக இடம்பெற்றிருப்பதும் படிப்படியாக அடுத்தடுத்த தொகுதிகளில் இச்சடங்கு குறைவாக இடம் பெறும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு முதல் தொகுதியில் அமைந்த சங்கப் பிரதிகளைக் காலநிரலில் பழமை மிக்கனவாகக் கருத இயலும். ஏனெனில், வெறியாட்டுச் சடங்கைத் தொல்பழங்குடி மக்களிடம் இடம்பெற்றிருந்த சடங்காகக் கருத இயலும். இச்சடங்கில் இடம்பெறும் கட்டுவிச்சி குறிசொல்லல், அதற்குப் பயன்படுத்தும் கழங்கு ஆகியவை தொல்குடி மரபோடு இணைந்தவை. பின்னர் உருவான வைதீக மரபோடு தொடர்புபடுத்த இயலாதவை. இன்றும் இந்தச் சடங்கு குறவர் போன்ற பழங்குடி மக்களிடம் புழக்கத்தில் இருப்பதைக் காண்கிறோம். வெறியாட்டில் வரும் வேலன், அவன் பயன்படுத்தும் வேல் ஆகியவை தொல்குடி மரபிலிருந்து வளர்ச்சியுற்றுப் பின்னர் முருகனுக்கு உரியவையாக உருப்பெற்றன. முதல் தொகுதியில் கூறப்படும் நற்றிணை, குறுந் தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றில் இச்சடங்கு மிகுதியாக இடம்பெறுவதன் மூலம் இப்பிரதிகளின் காலப் பழமை உறுதியாகின்றது. பின்னர் வைதீகச் செல்வாக்குப் பெற்ற பிரதிகளில் இச்சடங்கு நிகழ்த்துதல் மறைந்து போவதைக் காண்கிறோம்.
வெறியாட்டு போன்ற பிறிதொரு சடங்காகக் கல் நட்டு வழிபடும் ‘நடுகல்’ சடங்கைக் கூறலாம். அகழ்வாய்வுகள் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ள ‘பதுக்கைகள்’ எனப்படும் கற்படைகள் தமிழகம் முழுவதும் மிகுதியாகக் கிடைத்துள்ளன. ஊரிருக் கைகள் அமைந்த பகுதிகளில் இவ்வகையான நடுகற்கள் மிகுதி யாகக் கிடைத்துள்ளன. வீரனை நினைவுபடுத்தும் வகையில் கல் நடப்பட்டு வழிபடப்பட்டவை இவை. இதனை நடுகல் என்று அழைக்கிறோம் வீரக்கற்கள் (Hero Stones) என்று அழைக்கப் படும் நடுகற்கள் குறித்த பதிவுகள் பின்வருமாறு அமைகின்றன. புறநானூற்றில் பதினாறு இடங்களில் நடுகற்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பதிற்றுப்பத்தில் ஒன்பது இடங்களில் பதிவாகியுள்ளது. குறுந்தொகை, ஐங்குறு நூறு ஆகியவற்றில் முறையே இரு இடங்களில் இடம்பெற்றுள்ளன. நற்றிணையில் ஒரு இடத்தில் பதிவாகியுள்ளது. இரண்டாம் தொகுதியாக அமையும் பாடல்களில் மலைபடுகடாத்தில் ஒரே ஓர் இடத்தில் இடம்பெற்றுள்ளது.பரிபாடலிலும், திருமுருகாற்றுப் படையிலும் தலா ஓர் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
வெறியாடல் போன்று, நடுகல் மரபும் தொல்பழங்குடிச் சமூக அமைப்பின் அடையாளத்தைக் கொண்டது. இச்சடங்கு தொல்பழம் பிரதிகளில் இடம்பெற்று, படிப்படியாக வைதீகப் பிரதிகளில் மிகக் குறைந்து போயிருப்பதைக் காண்கிறோம். எனவே, தொல்பழஞ் சடங்கைக் கொண்டிருக்கும் பிரதி பழம் பிரதியாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். நடுகற்களில் காணப்படும் பிராமி எழுத்துக்கள், தமிழின் தொன்மையான எழுத்து வடிவம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கி.மு. 550 அளவில் நடப்பட்ட நடுகல் கிடைத்துள்ளது. இதில் பிராமி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் தொல்பழம் தமிழ் எழுத்தின் தரவாக அமையும் நடுகற்கள், சங்க இலக்கியத்தில் பேசப்படுவதன் மூலம் அதன் பழமையை அறிய முடியும். பிராமி எழுத்துக்களோடு காணப்படும் நடுகற்களில் சங்க இலக்கியத்தில் காணப்படும் பெயர்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய மொழி அமைப்போடு நடுகல் மொழியும் ஒப்புமை உடையதாக அமைந்திருக்கிறது. (பார்க்க: ஐராவதம் மகாதேவன்: Early Tamil Paleography B.C. 250 -A.D.600) இவ்வகையில் சங்கப் பிரதிகள் வழி அறியப்படும் நடுகற்கள் மூலம் சங்கப் பிரதிகளின் காலநிரல்படுத்துதல் சாத்தியமாகிறது.
வெறியாட்டு, நடுகல் ஆகிய சடங்குகளைப் போலவே ‘பலி கொடுத்தல்’ எனும் சடங்கு சங்கப் பிரதிகளில் பேசப்படுகிறது. மிக அதிகமாகச் சங்கப் பிரதிகளில் இடம்பெறும் சடங்குகளில் ஒன்று ‘பலி கொடுத்தல்’ அகநானூற்றில் (22, 35, 166, 167, 213, 232, 282, 289, 369) பலி தொடர்பான செய்திகள் மிக அதிகமாக இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். நற்றிணையிலும் (73, 251, 281, 203, 322,343, 358, 367) பலி குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. புறநானூற்றில் பலி குறித்த விரிவான செய்திகள் (52, 143, 324, 3×2) இடம்பெற்றுள்ளன. வீரர்கள் பதுக்கைகள் இருக்குமிடம் சென்று, அக்கற்களுக்கு (நடுகல்) பீலி சூட்டுவர், கள்ளைப் படைப்பர், பின்னர் செம்மறி ஆட்டுக்குட்டியைப் பலி கொடுப்பர் (அகம்: 35) என்று பலி பதிவாகியிருப்பதைக் காண்கிறோம்.
பசுக் கூட்டத்தைக் கவர்ந்து கொண்டுவந்த வீரர்கள், வேப்ப மரத்தடியில் வாழும் தெய்வத்திற்குப் பலி கொடுத்தனர். தாம் கவர்ந்துகொண்டு வந்த பசுக்களில் கொழுவிய ஒன்றைக் கொன்று, அதன் குருதியை மரத்தின்மேல் தெளிப்பர்; பின்னர் அதன் கறியை சமைத்து உண்டனர் (அகம்: 309) என்றும் அறிகிறோம். பிணி நீங்குவதற்காக வெள்ளாட்டுக் கிடாயைத் தாய் பலி கொடுத்ததாகவும் (அகம்: 156) அறிகிறோம். வெறி யாட்டம் நிகழ்த்தும்போது சிறு ஆட்டுக்குட்டியைப் பலி கொடுத்த தகவல் (குறுந்: 362) இடம் பெற்றுள்ளது. கையில் காப்பு நூல் கட்டி, கொற்றவைக்குப் பலி கொடுப்பதற்குச் சென்ற தலைவன் மீண்டு வந்துவிடுவான் (குறுந்: 218) என்றும் பேசுவதைக் காண்கிறோம்.
சங்கப் பிரதிகளை மேலே நாம் தொகுதியாகப் பிரித்துள்ள அடிப்படையில் முதல் தொகுதியில் மிக அதிகமான பதிவுகள் பலியைப்பற்றி வந்திருப்பதைக் காண்கிறோம். இரண்டாம் தொகுதியில் நான்கு இடங்களில் மட்டுமே பலி பற்றிய பதிவைக் காண்கிறோம். கலித்தொகையில் மூன்று இடங் களிலும் திருமுருகாற்றுப்படையில் ஓர் இடத்திலும் பலிபற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. முதல் தொகுதியில் உள்ள பிரதிகளில் சடங்குகளாக பலி நிகழ்த்தப்படுகிறது. வைதீக மரபு சார்ந்த வழிபாடாக அவை இல்லை. ஆனால், மூன்று, நான்காம் தொகுதிகளில் காணப்படும் பலி தொடர்பான செய்திகள் வைதீகத் தன்மையுடன் பேசப்படுகின்றன. எனவே, தொல் பழங்குடி மக்களிடம் காணப்பட்ட சடங்குகள் தொகுதி ஒன்றில் மிகுதியாகக் காணப்படுவதன் மூலம் அவற்றின் பழமையை அறிய முடிகிறது. பின்னர் வந்த பிரதிகளில் அவை படிப்படியாகக் குறைந்துள்ளன.
சங்க இலக்கியப் பிரதிகளைக் கால நிரல்படுத்துவதற்கு விரிவான தரவுகளைச் சடங்கு அடிப்படையில் கொடுக்க இயலும். சங்க இலக்கியத்தில் காணப்படும் அனைத்துச் சடங்குகளையும் அவை இடம்பெற்றிருக்கும் எண்ணிக்கை சார்ந்து நாம் வரைபடத்தை உருவாக்கினால், அதன்மூலம் நாம் அறிய முடியும். இதனைக் காட்டும் வகையில், மூன்று சடங்கு களை மட்டும் எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு மேலே நாம் விவரித்துள்ளோம். சடங்கிலிருந்து உருப்பெறும் படிப் படியான வழிபாடு தொடர்பான மானிடவியல் கூறுகளை நாம் ஆய்வு செய்தால், மேற்குறித்தவாறு சங்க இலக்கியப் பிரதிகளில் சடங்குகள் இடம்பெற்றிருப்பதை அறிய முடியும்.
மனித சமூக வரலாற்றில் ஆதி அறிவு என்பது புலன் அறிவுதான் (Perceptual knowledge). நடைமுறை வாழ்வே மனிதனுக்கு அனுபவமாகி, அதுவே அறிவாகவும் கட்டமைக்கப் படுகிறது. பகுத்தறிவு, தர்க்க அறிவு (Rational or Logical Knowledge) என்பவை பொருட்களின் இயல்பு, உட்சாரம் ஆகியவை கண்டறிந்த சூழலிலிருந்துதான் காணமுடியும். புலனறிவிலிருந்து முழுமையாக வளர்ச்சியடைந்த கருத்துக் களை (concepts) அடிப்படையாகக் கொண்டே, பகுத்தறிவு வளர்ச்சியாதல் (cognition) சாத்தியமாகிறது. இவ்வகையான சிந்தனை வளர்ச்சியைத் தொடர்புபடுத்திப் பார்ப்பதன் மூலம் (Associate Complex) அறியமுடியும் என்று சமூக மானிடவியல் (Social Anthropology) மற்றும் வரலாற்று மொழியியல் (Historical Linguistics) கோட்பாடுகள் சார்ந்து விவாதிக்க முடியும். இத் தன்மையைச் சங்க இலக்கியப் பிரதிகளைத் தொகுதிகளாகப் பாகுபடுத்தி, அதற்குள் இருக்கும் வளர்ச்சிப் போக்கை அடிப் படையாகக்கொண்டு காணமுடியும். இதன்மூலம் அப்பிரதி களின் கால ஒழுங்கை நிரல்படுத்த இயலும். இவ்வகையில் சங்கப் பிரதிகளை சடங்கு சார்ந்த தரவுகள் வழி கால நிரல் படுத்துவதன் மூலம், பின்காணும் தெளிவுகளை நோக்கி நாம் பயணம் செய்ய முடியும்.
தொகுப்பு மரபு ஒற்றை நேர்க்கோட்டுத் தன்மை யாக இருக்க முடியாது. பல்வேறு மரபுகளின் இணைவாகவே இருக்க முடியும். இவ்வகையில் அதனை அணுகாமல், ஒற்றைத் தன்மையில் அணு கினால் வரலாற்றுப் பிழைகளைச் செய்ய நேரிடும்; சமூக இயங்குநிலை (Dialectics) பற்றிய பார்வை இன்றிச் செயல்பட்டதாகவும் அமையும்.
தொல்பழம் பிரதிகளை அணுகும்போது மரபுத் தொடர்ச்சியைப் பற்றிய புரிதல் தேவை. அதன் மூலம் அப்பிரதிகளை வாசிக்கும் பார்வையில் தெளிவு ஏற்படும். அதற்கான ஒரு கருவியாக (tool) இவ் வகையான தொகுதியாக்கம் (நான்கு தொகுதிகள்) செய்யப்படுகிறது. இதன் மூலம் பிரதியை அதன் சூழலில் (context) வைத்து வாசிக்க முடியும்.
கி.பி.6, 9ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சூழலில் உருவான சமூக அசைவியக்கம் (தொகுப்பு மரபு) குறித்து இருபத்தோராம் நூற்றாண்டில் வாசிப் பதற்கு மேற்குறித்த தொகுதியாக்கம் உதவக்கூடும். சங்கப் பிரதிகளை ஆய்வு செய்ய வசதியாக இத் தொகுதியாக்க மரபில் பதிப்பிக்கவும் செய்யலாம்.
இவ்வகையான புரிதல் இல்லாமல் சங்கப் பிரதிகளை வாசிப்பதால், அவற்றை ‘சமஸ்கிருத காவிய மரபின் தமிழ் வடிவம்’ என்றும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டளவில் இவை தோன்றியிருக்க வேண்டும் என்றும் ஹெர்மன் டிக்கன் (Herman Tieken) என்பவரால் பேச முடிகிறது. முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவதாக அமையும் இவரது புரிதல், அப்பிரதிகளின் பழமை குறித்த காலநிரலைப் பற்றிய புரிதல் இன்மையே. கலித்தொகையிலிருந்தே சங்கப் பிரதிகளின் காலத்தை அவர் மதிப்பிடுகிறார். கலித்தொகையின் இணைப் பிரதிகளாக ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றை அவர் புரிந்துகொள்கிறார். இந்த விபத்தை, இப்பிரதிகளின் காலத் தொகையாக்கத்தைப் பற்றிய புரிதல் மூலம் தவிர்க்க முடியும். டிக்கன் அவர்களின் நேர்க்கோட்டு ஒற்றைப் பார்வை வரலாற்றுப் பிழைக்குக் காரணமாகிறது (பார்க்க: Kavya in South India – Old Tamil Cankam Poetry – 2001).
செவ்விலக்கியப் பாடல் உருவாக்க மரபு, செவ்விலக்கியப் பாடல் தொகுப்பு மரபு, பாடல்களுக்கு உரை எழுதிய மரபு, அச்சில் பதிப்பித்த மரபு என்ற சங்கப் பனுவல்களின் தொடர்ச்சி யாக, அண்மைக்காலச் சங்கப் பனுவல் வாசிப்பு மரபில் தொகை யாக்கத்தின் மூலம் கால நிரல்படுத்துதல் தேவைப்படுகிறது. இதன்மூலம், சங்கச் செவ்விலக்கியப் பிரதி வாசிப்பு மேலும் செழுமையுறும்.