தமிழ்மொழியும் சூழலியல் இயக்கமும்

Published: March 4, 2026 Read by: 11 Get full article

மன்னார் வளைகுடாவில், கடலில் வாழும் ஒரு அரிய வகை பாலூட்டி அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாநிலத்திலும் உண்டு.  அங்கு பழங்குடியினர் மொழியில் இது டுகாங் என்று அறியப்படுகின்றது.  அதை Sea cow என்று அமெரிக்கர்கள்  குறிப்பிடுகின்றனர். மன்னார்வளைகுடா ஒருசரணாலயமாக ஆக்கப்பட்டபோது நமது வனத்துறை இதை மொழிபெயர்த்து  ‘கடற்பசுவை காப்பாற்றுங்கள்” என்று துண்டுப்பிரசுரம் அடித்து  ராமேஸ்வர கரையோர கிராமங்களில் வினியோகித்தனர்.  இந்தப் பெயரை  கேட்டறியாத மீனவர்கள், கடலில் பசு விழுந்து விட்டால் காப்பாற்றுங்கள் என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது எனப் புரிந்து கொண்டார்கள்.  அங்கு ஊழிகாலமாக வாழும் அந்தவிலங்கிற்கு ஒரு தமிழ்ப்பெயர் இருப்பதை வனத்துறை அறியவில்லை. டுகாங்கின் தமிழ்ப்பெயர் ஆவுளியா

 

சுற்றுச்சூழல் ஒரு  பாரம்பரிய துறை அல்ல.  எழுபதுகளில் புதிதாக உருவான அக்கறை..  .ஒரு சமூகத்தில் புதுஅக்கறைகள் தோன்றும் போது, அவைவளர வேண்டு மென்றால் மொழி வலுவூட்டபடவேண்டும். அவைகளைப் பற்றிய ஒரு சொல்லாடல் தோன்ற வேண்டும். இதற்கு புதிய சொற்கள், சொற்றொடர்கள் உருவாக்கப்பட வேண்டும். அல்லது பழைய சொற்களை மீட்டுருவாக்கம் செய்து, புத்துயிரூட்டி புதிய தேவைகளுக்காக அவை பயன்படுத்தப்பட வேண்டும். பெண்ணியம், மனிதஉரிமை, பாலினசமத்துவம்,அணுஆயுத எதிர்ப்பு போன்ற்வை இம்மாதிரியான புதிய கரிசனங்கள்.  மொழியின் விரிவாற்றலை பயன்படுத்தி புதிய அக்கறைகளைப் பற்றிய சொல்லாடலை உருவாக்க வேண்டும்.    எடுத்துக்காட்டாக அணு ஆயுதம் பற்றிய சொல்லாடல். இது பற்றி பரந்த விவாதம் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றது.  அணு ஆயுத பயன்பாட்டில் ஒரு முக்கிய சொல் delivery.  இந்தப் பதத்திற்கு சரியான சொல் இல்லாமல் விவாதத்தை நகர்த்த முடியாது. இம்மாதிரியான  புதிய கரிசனங்கள்  தற்கால தமிழ் உரைநடையின் தேவைகளை அடிக்கோடிட்டு காட்டுகின்றன. அதே போல் தான் சுற்றுச்சூழலும்.

 

”’மொழிக்கும் சூழலியலுக்கும் உள்ள இருவழி உறவு மேம்படுத்தப்பட வேண்டும். சூழலியல் ப்ரச்னைகளைப் பற்றிப் பேசும்போது மொழி பற்றிய சொல்லாடல் அங்கெ இடம் பெற வேண்டும்.”

-டேவிட் கிறிஸ்டல், மொழியின் மரணம் எனும் நூலில் (1)

அறுபதுகளில் ரேச்சல் கார்சன் எழுதிய ஒலியற்ற வசந்தம் நூல் வெளிவந்ததைத் தொடர்ந்து பன்னாட்டளவில் சுற்றுச்சூழல் பற்றிய சொல்லாடல் தொடங்கியது. 1972இல் தோன்றிய பெட்ரொல் தட்டுப்பாடு இந்தியாவில் இந்த பிரச்னை விவாதிக்கபட்டது. அதே ஆண்டு ஸ்டோக்க்ஹோம் நகரில் இந்தியா உட்பட113 நாடுகள் பங்கேற்ற மாநாடு நடந்தது.

 

ஆனால் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பற்றிய சொல்லாடல் எதுவும் தோன்றவில்லை கலைச்சொற்கள் உருவாக்கப்படவில்லை. அதே காலகட்டத்தில் எழுபதுகளில், கேரளாவில் அமைதிப்பள்ளத்தாக்கை காப்பாற்ற ஒரு மக்கள் இயக்கம் எழுந்தது.கேரளாசாஸ்திரசாஹித்ய பரிஷத் இதை முன்னின்று நடத்தியது. இந்த இயக்கம் முழுக்க முழுக்க மலையாளத்தில் நடத்தப்பட்டது இதன் வெற்றிக்கு ஒரு காரணம் என்று நான் நினைக்கின்றேன். கையேடுகள், துண்டுப்பிரசுரங்கள் எல்லாமே மலையாளத்தில் இருந்தன. அமைதிப்பள்ளத்தாக்கு காப்பாற்றப்பட்டுவிட்டது

இன்று நம்நாட்டில் சூழியிலாளர்களை உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரச்னை நிக்கோபார் தீவைப்பற்றியது. அங்கு ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை அரசு செயல்படுத்தவிருக்கின்றது. 130 சதுர கிலொமீட்டர் பரப்பு மழைக்காடுகள் அழிக்கப்படவிருக்கின்றது. நிக்கோபார் புறாபோன்ற அரிய உயிரினங்கள் அழிவை எதிர் நோக்குகின்றன. ஆனால் தமிழ்கூறும் நல்ல்லுலகின் அது பற்றி பேச்சே இல்லை.

 

சுற்றுச்சூழல்,, காட்டுயிர் பேணல் பற்றி விவாதிக்க தமிழில்துறைச்சொற்கள் உருவாக்கப்படவில்லை. இதனால்தானோ என்னவோ சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் பற்றிய சொல்லாடல் அரிதாகவே காணப்படுகின்றன.,   இங்கு ஜீவ நதிகள் வரண்டுவிட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படவில்லை.

நமது இலக்கிய பாரம்பரியத்தில் , இயற்கையுடன் ஒருபிணைப்பு இருப்பதைக் காணலாம் இயற்கையையை பற்றி, தாவரம், புள்ளினம், விலங்குகள் பற்றிய துல்லியாமான கவின்மிகு குறிப்புகளை காணும் போது, தற்காலத்தமிழில் அது இல்லாதது புலப்படுகின்றது. தமிழ் இலக்கிய மரபில் ஏதோ ஒருகாலகட்டத்தில் புறவுலகிற்கும் நமக்கும் இருந்த பிணைப்பு அறுபட்டுபோய்விட்டது என்பது புரிகின்றது.

ஒர் ஊரிலிருந்து இன்னோரு ஊருக்கு ஒருவர் பயணிப்பதை கவிஞர் சொல்ல முற்பட்டால், அவரது பாதையில் இருக்கும் மரங்கள், செடிகள், ஏரிகள் இவற்றை வர்ணித்து பிறகு அவர் அங்கு போய்ச்சேர்ந்தார் என்று முடிப்பார்.

முத்தொள்ளாயிரத்தில் ஒரு பாடல். ஒரு கவிஞர் சேர மன்னனை புகழ்ந்து பாடுகின்றார்.

 

அள்ளல்பழனத்துஅரக்குஆம்பல்வாய்அவிழ
வெள்ளம்தீப்பட்டதுஎனவெரீஇ, – புள்ளினம்தம்
கைச்சிறகால்பார்ப்புஒடுக்கும்கௌவைஉடைத்துஅரோ
நச்சிலைவேல்கோக்கோதைநாடு

 

தமிழ் போன்ற தொல்பெரும் மொழிகளில் ஒரு பறவை அல்லது ஒரு பாலூட்டியின் பாரம்பரியப் பெயர் வெறும் ஒரு சொல்லல்ல. அது ஒரு சிறு இயற்கை வரலாற்று விவரக்குறிப்பு. ஒரு கேப்ஸ்யூல்.   பொருள் பொதிந்த காரணப்பெயர்கள் அவை. அந்த உயிரினத்தைப் பற்றிய முக்கிய தகவலை உள்ளடக்கி இருக்கும் சொற்றொடர்.  ஒரு பறவையின் தமிழ்ப் பெயர் அதன்  இயல்பைப் பற்றி நமக்கு ஒரு தகவல் தரக்கூடும். எடுத்துக்காட்டு  அடர்ந்த சோலைக்காடுகளில் வாழும், உலகிலேயே சிறந்த பாடும் புள்ளினம் என்று பெயர் பெற்ற சோலைபாடி. இதன் இந்திபெயர் ஷமா. அதே போல வங்குகளில் வாழும் சிறிய நரிக்கு குழி நரி என்று பெயர். புதர்களில் வாழும் இதைவிட உருவில் பெரிய நரிக்கு நரி என்று பெயர்.

உயிரியிகளின் தமிழ்ப் பெயர்கள் மறைவதற்கு பல காரணங்கள். ஆங்கில வழிக் கல்வி அதில் முக்கியமானது. ஆங்கிலப் பெயர்கள் மூலமே மாணவர்கள் தங்களைச் சுற்றிலும் உள்ள காட்டுயிர்களை அடையாளம் காண்கிறார்கள்.

வேர்களை இழந்த பெயர்களை வைத்து நம் சொல்லாடலைத் தொடருவதும் காட்டுயிர் பாதுகாப்பு பற்றி பேசுவதும் சிரமம். தமிழ்நாட்டில் காட்டுயிர் பாதுகாப்பு ஒரு மக்கள் இயக்கமாக உருவாகததற்கு இது ஒரு காரணம்.

அண்மையில்சுற்றுச்ச்சூழல்நமதுபள்ளிகளில்பாடமாகவைக்கப்பட்டிருக்கின்றது. இந்த துறைகளில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அவைகளில் பாரம்பரிய தமிழ்ப் பெயர்களை பயன்படுத்துவது தேவையாகிறது. சில பாடபுத்தகங்கள் வெளிவந்தன.  அவை அப்பொருள் பற்றி பரிச்சயம் இல்லாதவர்களால் எழுதப்பட்டு தரத்தில் தாழ்ந்து இருந்தன.  ஆங்கில நூல்களை அப்படியே மொழிபெயர்த்து வெளியிட்டுவிட்டார்கள்.  தரையில் முட்டையிடும் பறவைகளுக்கு எடுத்துக்காட்டாக பெங்குவின் பறவையைப் பற்றி எழுதியிருந்தார்கள். நம்மூர் காடை, கெளதாரி, மயில் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.

உயிரினம் சார்ந்த பழமொழிகள், உவமைகள், உருவகப்படுதல்கள் இவ்ற்றை நாம் பயன்படுத்தினால், புற உலகையும் அங்குவாழும் உயிரினஞ்களையும் நம்மாணவர்கள் அறிந்துகொள்வது எளிதாகும். உயிரின்ங்களின் பெயர்கள் நம் மொழிவளத்தின் ஒரு பரிமாணம்.  காட்டுயிர் பராமரிப்பு வளர மக்களிடை அந்த கரிசனம் பரவ இவை பள்ளிகளில் ஊடகங்களில் புழக்கத்திற்கு கொண்டுவரப்படவேண்டும்.

 

இன்று நாம் இந்த தமிழ்ப் பெயர்களில் இருந்து வெகுதூரம் சென்றுவிட்டோம். அலையாத்தி காடுகள் என்ற பொருள் பொதிந்த பெயரை விட்டுவிட்டு மாங்கிரோவ் காடுகள் என்கின்றோம். அதுமட்டுமல்ல புறவுலகைச் சார்ந்த பல தொன்மையான கருதுகோள்களையும் காற்றில் விட்டுவிட்டோம்.வெப்பபூமியான தமிழ்நாட்டின் பருவகாலங்களை மக்கள் ‘இளவேனில், முதுவேனில், கார். கூதிர், முன்பனி, பின்பனி என ஆறுவகைகளாக பிரித்திருந்தனர். இது வடஇந்தியபருவகாலங்களிலிருந்து வேறுபட்டது என்பதை மனதில்கொள்ளவேண்டும். இவற்றை மறந்துவிட்டு இன்று மேலைநாட்டிலுள்ள் நான்கு பருவங்களின் அடிப்படையில் காலக்கணக்கீடு பற்றி பேசிக்கொண்டிருக்கின்ரோம்.

 

பெயர்கள் மட்டுமல்ல். ஒவ்வோரு உயிரினததிற்கும் அதன் இயல்புசார்ந்த சொற்கள் உண்டு.  யானையில் பிளிறல், வேங்கையின் உறுமல், நரியில் ஊளை, மயிலின் அகவல் என.   மனிதருக்கு வெகு அருகில் நட்புணர்வின் வாழும் சில உயிரினங்களுக்கு பிள்ளை என்ற அடைமொழி கீரிப்பிள்ளை,   அணிற்பிள்ளை, கிளிப்பிள்ளை என -கொடுக்கப்பட்டது. இத்தகைய சொல்லாடல் மீட்கப்பட வேண்டும்.

நமது  நாட்டுப்புறக்கதைகள், புராணங்கள், பழமொழிகள் இவைகளை வைத்து சுவை பட சூழியல் கருத்தாங்களை சிறுவர்களுக்கு விளக்க முடியும்.  ”நுணலும் தன் வாயால் கெடும்” என்ற பழமொழியை மட்டும் எடுத்துக்கொண்டு எத்தனை இயற்கைக்கூறுகள் பற்றிப் பேசலாம்.?  நீர்நிலைகளைப் பற்றி, தவளைகளைப் பற்றி, நீர்-நிலம்வாழ் உயிரிகள் பற்றி, பாம்புகள் பற்றி., இரைகொல்லிகள் பற்றி…சொல்லிக் கொண்டே போகலாம்.

சுற்றுச்சூழல் சார்ந்த சொல்லாடல் உருவாகாததற்கு ஒரு காரணம் ஆங்கிலக்கல்வி. சூழலியல், காட்டுயிரியல் கடந்த சில பத்தாண்டுகளில் கல்விப்புலத்தில் ஒரு துறையாகதோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் அதில் பட்டம் பெற்ற பெருவாரியானோர் ஆங்கில பள்ளிகளில் படித்துவந்தவர்கள்..தமிழில் பரிச்சயம் அற்றவர்கள்.  பலருக்கு காட்டுயிர்களின் தமிழ்ப்பெயர்களே தெரியாது.

 

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பள்ளிச் சிறுவர்களுக்கான காட்டுயிர் பற்றிய ஒரு வினாடி வினா  போட்டிக்கு நடுவராக சென்றிருந்தேன். ஆயிரம் சிறுவர்கள் பங்கேற்றிருந்திருப்பார்கள். யாவரும் ஆங்கிலப்பள்ளியில் படிப்பவர்கள். நம்மூர் புலி, யானை,மயில் பற்றி , அந்த விலங்குகள் இல்லாத ஒரு நாட்டின் மொழியில்,  ஆங்கிலத்தில்  படிக்கின்றார்கள்.   தமிழில்   யானை, புலி  பற்றிய பழமொழிகள், அவைகளுக்கு இருக்கும் பல  பெயர்கள், கவிதைகள், கதைகள் இவற்றறை அவர்களறிய மாட்டார்கள். எத்தைகைய மொழி சார்ந்த வறுமை இது? ஒரு பெரிய மொழி பாரம்பரியமே இங்கு அழிந்து போய்க்கொண்டிருக்கின்றது.

தமிழ்நாட்டிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஆங்கிலேயர் வருவதற்கு முன் தமிழில் பெயர்கள் இருந்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் இன்று அந்த மூலப்பெயர்கள் மறக்கப்பட்டு,  பிரித்தானியர்கள் நம் காட்டுயிர்களுக்கு வைத்த ஆங்கிலப்பெயர்களை தமிழில் மொழிபெயர்த்து புதிய பொருத்தமில்லாத பெயர்களை நாம் உயிரினங்களுக்கு சூட்டிவிட்டோம், அரசு ஆவணங்களிலும், ,   இந்த மொழிபெயர்ப்பு பெயர்களே இடம்பெற்றுவிட்டன. எடுத்துக்காட்டாக ,   உருவிலும், நீளத்திலும் பெரிய, காட்டில் வசிக்கும் king cobra என்றறியப்படும் பாம்பிற்கு தமிழ்ப் பெயர் கருநாகம். இதை மறந்துவிட்டு, அண்மையில் வந்த ஆங்கிலப் பெயரை தமிழாக்கம் செய்து ராஜநாகம் என்று வைத்துள்ளனர். அருவி என்ற அழகிய சொல் மறைந்து நீர்வீழ்ச்சி நிலைத்துவிட்டது போல.

. இன்று வலைப்பூ, மின்னஞ்சல்  இவை இந்த சுற்றுச்சூழல்சார்ந்த சொல்லாடலுக்கு  வசதியாக இருக்கின்றன. எடுத்துக்காட்டு  , கொரில்லா, சிம்பன்சி போன்ற ape என்ற காட்டுயிரை தமிழில் எப்படி குறிப்பிடலாம்? மனித குரங்கா அல்லது வாலில்லாக் குரங்கா? இது பற்றிய சுவையான விவாதம்  நடந்தது.   (வாலில்லா குரங்குதான் பொருத்தமானது என்பது என் நிலைப்பாடு.)

ஒரு சமூகத்தில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்பு ஏற்படுகின்றது என்பதற்கு ஒரு அறிகுறி பசுமை இலக்கியம்..   பசுமை இலக்கியம் சுற்றுச்சூழல் பேணலையும் இயற்கையும் போற்றுகின்றது.  மானுடருக்கும் சுற்றுச்சூழலுக்கும் இருக்கும் உறவை கவனிக்கின்றது.இந்த பெயர்சூட்டப்படுமுன்பே ,  தமிழில் சென்ற, நூற்றாண்டில் சிலர் இயற்கையை அவதானித்து எழுதிக்கொண்டிருந்தார்க்ள்.  அதில் சிறப்பாக சொல்லப்படவேண்டியவர் மா.கிருஷ்ணன். ஆனால் தமிழில் அவர் சிறிதுகாலம்தான் எழுதினார்.

 

தமிழில் அவ்வவ்போது வந்த சில புதினங்களை குறிப்பிட வேண்டும். சா.கந்தசாமியின் சாயாவனம்,ஜெயமோகனின் காடு, சோ.தர்மனின் கூகை, பெருமாள் முருகனின் கூளமாதாரி இவை நினைவிற்கு வருகின்றன. பூவுலகின் நண்பர்கள்,  காட்டுயிர் போன்ற சில இதழ்களும் தோன்றியிருக்கின்றன. இவை வரவேற்கத்தக்க அறிகுறிகள்.

ஜெயமோகனின் ரப்பர். காடு போன்ற நாவல்கள் சுற்றுச்சூழலை சார்ந்த படைப்புகள்.  காட்டில் வாழும் மக்களைப் பற்றியும் அங்கு உலவும் உயிரினங்கள் பற்றியும் காடு நாவலில் எழுதினார்.  . ”

கடலோரப்பகுதிகளைப் பற்றி தமிழில் எழுதி ஒரு விழிப்புணர்வை ஊட்டிவருபவர் வஃறீதய்ய கான்ஸ்தத்தின்.  தெற்கே மணப்பாடு முதல் வடக்கே பழவேற்காடுவரை கடற்கரை வாழ் மக்களின் வாழ்வியல் நெறிமுறைகள் பற்றி, அவர்கள் பண்பாடுபற்றி எழுதுகின்றார். கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி இவரது நூல்கள் கூறுகின்றன.   கடல்கோள்காலம் போன்ற நூல்கள் மூலமும் இவர் கடலை நம்பி வாழும் மக்களைப்பற்றி எழுதுகின்றார். சுப்ரபாரதிமணியன் எழுதியசாயத்திரை எனும்நூல் திருப்பூர் சாயப்பட்டறைகளால் ஏற்பட்ட சூழல் மாசுபாட்டைப் பேசுகிறது. 

சுற்றுச்சூழல் சார்ந்த படைப்புகளை மட்டும் எழுதி,  தமிழில் இன்று தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் நக்கீரன். அவர் ,மழைக்காடுகளை பற்றி ஒரு நூல்எழுதியுள்ளா. அலையாத்தி காடுகளைப் பற்றி, அதாவது மாங்கிரோவ் காடுகள், ஒரு நூல் எழுதியிருக்கின்றார். தமிழ்மொழி சுற்றுச்சூழல் பற்றி பேச உகந்த மொழி என்கின்றார். தொல்பழங்காலத்திலிருந்தே இயற்கை பற்றி கவிஞர்கள் எழுதியதால், இம்மொழிக்கு இந்த திறன்

கடந்த இருபது ஆண்டுகளில் கவிதைகளிலு பசுமை இலக்கியத்தின் துளிர்களை காண்பது மகிழ்ச்சியை தருகின்றது.   அருமையான கவிஞர்கள் இயற்கைசார்ந்த படைப்புகளைத் தருகின்றார்கள். சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை அவர்கள் எழுத்துக்களில் தெரிகின்றது. ஆசைத்தம்பி எழுதிய கவிதைகள் கொண்டலாத்தி என்ற தலைப்பில் புத்தகவடிவில் வந்துள்ளது

ஆசை, சதீஷ் முத்து கோபால் பொன்ற கவிஞர்கள் பசுமைக் கவிதை மட்டுமே எழுதுகின்றர்கள். பல ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் தேவதேவன், கலாப்ரியா போன்ற மூத்த கவிஞர்களும் அவ்வப்போது பசுமைக்கவிதை படைக்கின்றார்கள்.தேவதேவன் கவிதைகளில் காட்டுயிர் பற்றிய கரிசனத்தைக் காணாலாம்

பசுமை இலக்கியத்தின் ஒரு குறியீடாக  அண்மையில் முகநூலில் படித்த ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.. கவிஞர் கலாப்ரியாவின் படைப்பு

 

வற்றிக் கொண்டிருக்கும்

குளச் சகதியில்

நீரருந்த வரும் குட்டி ஆட்டைக்

கடைசிக் கனிவுடன் பார்க்கிறது

மெலிந்த ஒற்றைத் தாமரை